அரசு கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்!

 
1

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணையவழியில் 30.06.2026 முதல் 07.07.2026 வரை விண்ணப்பிக்கலாம் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு (General Counselling) 30.06.2026 முதல் 07.07.2026 வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள், நூலகர்கள். உடற்கல்வி இயக்குநர்கள் www.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என  உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  இந்த இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை தேர்வு செய்து, நீங்கள் எந்த கல்லூரிக்கு மாற விருப்பப்படுகிறீர்களோ  அதனை தேர்வு செய்து, உரிய காரணத்தை கொடுத்து விண்ணப்பிக்கலாம்.

பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே  பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  அண்மையில் தான், பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. தற்போது உயர்க்கல்வித்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.