போலி உயிலை வைத்து நெல்லை இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி- உரிமையாளர் கவிதா சிங்
நெல்லை இருட்டுக்கடையை போலி உயிலை வைத்து அபகரிக்க முயற்சிப்பதாக உரிமையாளர் கவிதா சிங் கூறியுள்ளார்.

அல்வா என்றாலே திருநெல்வேலி இருட்டுக்கடை தான் மக்கள் கண் முன் ஞாபகத்திற்கு வருகின்ற அளவிற்கு அதனுடைய சுவை உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இருட்டுக்கடை நிர்வாகத்தில் நடைபெற்று வரக்கூடிய பிரச்சினைகள் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இருட்டு கடையின் உரிமையாளராக இருப்பவர் கவிதா சிங். இவரது மகள் கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங், என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற ஒன்றரை மாதத்திலேயே கனிஷ்கா தன்னுடைய கணவர் பலராம் சிங், வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாகவும், இருட்டுக்கடை நிறுவனத்தின் உரிமத்தை மாற்றி தரக் கோரியும் மிரட்டல் விடுப்பதாக நெல்லை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருந்தார். அதை மறுக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த மணமகன் பல்ராம் சிங் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மணமகள் கனிஷ்கா தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மணமகன் பல்ராம் சிங் ஆஜராக சமம்ன் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஆஜராகாமல் அவரது வழக்கறிஞர் ராஜா ராணி பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டார். இப்படியாக இருட்டுக்கடை விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென இருட்டுக்கடை தனக்கு தான் சொந்தம் தன்னிடம் அதற்கான உயில் இருக்கிறது என தற்பொழுது இருட்டுக்கடை உரிமையாளராக இருக்கும் கவிதா சிங்கின், அண்ணன் நயன்சிங் பத்திரிகையில் பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இன்று கவிதா சிங் தரப்பில் பத்திரிக்கையி, “நயன்சிங், போலியான உயிலை வைத்துக் கொண்டு இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி செய்கிறார். கடந்த 2020 ஆண்டு முதல் கவிதா சிங் இருட்டுக்கடையை நிர்வாகித்து வருகிறார். சுலோச்சனா பாய் உயிரோடு இருக்கும் வரை நயன்சிங் எந்த சொத்துக்களுக்கும் உரிமை கூறியது இல்லை. 2020 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த பிறகு சொத்துக்கள் பிரிக்கப்படாமல் உள்ளது” என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


