திருப்பூருக்கு வேலை தேடி வந்த பெண்ணை கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி

 
ச்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை தேடி ரயில் மூலம் திருப்பூர் வந்த நிலையில், வேலை வாங்கி தருவதாக கூறி அப்பெண்ணை கடத்தி சென்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை தேடி ரெயில் மூலம் திருப்பூருக்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தனியாக நின்றிருந்த அந்த பெண்ணிடம்  பேச்சு கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண் தான் வேலை தேடி இங்கு வந்திருப்பதாக கூறினார். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், தான் ஒரு பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகவும், நினைத்தால் உடனே வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளார். அதை நம்பிய அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் அழைத்துச் சென்றுள்ளார்.

நள்ளிரவு 1 மணி அளவில், அந்த பெண்ணை திருப்பூர் நல்லூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்கு அந்த வாலிபர் கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த பெண்ணிடம் வாலிபர் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு, பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த  பெண், அவரிடம் இருந்து தப்பிக்க  காட்டுப்பகுதியில் அலறியடித்துக் கொண்டு கூச்சலிட்டபடி ஓடியுள்ளார். உயிருக்கு பயந்து காங்கயம் ரோட்டை நோக்கி ஓடி வந்துள்ளார். அப்போது புதுப்பாளையம் பகுதியில் நள்ளிரவிலும் திறந்திருந்த ஒரு பேக்கரிக்குள்  நுழைந்து அங்கிருந்தவர்களிடம் தஞ்சம் புகுந்து, தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேக்கரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வருவதற்குள், அந்த இளைஞர் அங்கிருந்து  தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.