குழந்தை கடத்த வந்ததாக கூறி வடமாநில இளைஞர் மீது சரமாரி தாக்குதல்!

 
vellore

வேலூர் அருகே வேலை தேடி சுற்றித் திரிந்த வடமாநில இளைஞரை குழந்தை கடத்ததாக கூறி பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே வடமாநில இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்துள்ளார். அந்த இளைஞர் குழந்தை கடத்த வந்திருப்பதாக சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த இளைஞருக்கு தமிழ் தெரியாத நிலையில், இதனால் அவர்கள் பேசுவதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அப்பகுதி மக்கள் அவரை குழந்தை கடத்த வந்தவர் என கூறி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் வேலை தேடி வேலுருக்கு வந்ததும், அவரை குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.