அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்! சென்னையில் பரபரப்பு

 
KKSSR

சென்னையில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் மற்றும் அவருடைய பேரன் ஆகியோர், சென்னை தேனாம்பேட்டை ஏஜிஎஸ் திரையரங்கிற்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் பார்க்க வந்துள்ளனர். படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்னால் அமர்ந்திருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் அதிக சத்தம் எழுப்பி விசில் அடித்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.  ஆபாசமாக கூச்சலிட்டத்தை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் பேரன் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் பேரனுக்கும் 6 பேர் கொண்ட கும்பலுக்கும் திரையரங்கில் வாக்குவாதம் ஏற்பட்டபோது 6 பேர் கும்பல் தாக்கியதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேரன் கதிருக்கு வாய் உடைந்தது. காயமடைந்த அமைச்சரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருதரப்பினரின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அமைச்சரின் பேரனை தாக்குதல் நடத்திய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.