பாதாள அறையில் இருந்து மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்!
பாதாள அறையில் இருந்து மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த மூலவர் சந்நிதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்தி மரத்தாலான, சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த அத்திவரதர் சிலை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு, மீண்டும் பாதாள அறைக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி, 12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து எடுக்கப்பட்டு, மார்ச் 1-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்யவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
1915-ஆம் ஆண்டுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இந்த சிலை வெளியே எடுத்து வைக்கப்படவில்லை. சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை மார்ச் 01-ஆம் தேதி வெளியில் எடுக்கப்படவுள்ளது. சிறப்பு பூஜைகளுக்குப்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு, மார்ச் 10-ந் தேதி வரை இந்த சிலையை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிகளின்படி காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 05 மணி முதல் இரவு 08.30 மணி வரை தைலக்காப்பு, புஷ்ப சேவை, ஊஞ்சல் சேவைகளை பக்தர்களே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

