கோர விபத்து : லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து: குழந்தை உட்பட 20 பேர் காயம்..!

 
1

கோயம்புத்தூரில் இருந்து பயணிகளுடன்  ஆம்னி பேருந்து நேற்றிரவு நாகர்கோவில் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் நின்றுக் கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முகப்பு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் பேருந்து ஓட்டுநர் சரவணன், 8 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்த பேருந்து ஓட்டுநரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், பேருந்து பயணிகளும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றன.