அம்மோனியா வாயுக்கசிவு சம்பவத்தில் தற்போது வரை 16 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை விளக்கம்..!

 
1

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 41 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 25 பெண்கள், ஒரு ஆண் உள்ளிட்ட 26 பேர் சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடனும், 9 பேர் ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள 16 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 21 முதல் ஜூன் 27 பிற்பகல் 3 மணி வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் ஆவார்கள். மேலும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 12 பேரின் உடல்கள் விமானம் மூலம் ஒடிசாவிற்கும், 2 பேரின் உடல்கள் அசாமிற்கும் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 பேரின் உடல்களும் சட்ட நடைமுறைகள் முடிந்ததும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.