பிரதமருக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா..!

 
1
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்ற சுபான்ஷு சுக்லா, 18 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.இதன் மூலம், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.
 

இதனிடையே, விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த சுக்லாவை அவரது குடும்பத்தினர், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்பட பலர் வரவேற்றனர்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது, சுபான்ஷு சுக்லாவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

மேலும், விண்வெளி அனுபவங்கள் குறித்து சுபான்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், விண்வெளி பயணம் மேற்கொண்ட சுபான்ஷு சுக்லாவை பிரதமர் மோடி பாராட்டினார்.சுபான்ஷூ சுக்லா. தனது வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தின் போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தான் எடுத்துச் சென்ற இந்திய தேசியக் கொடியை பிரதமருக்கு வழங்கினார் சுபான்ஷு சுக்லா.


மேலும் டெல்லியில் வரும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களில் சுபான்ஷு சுக்லா பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.