விஜயபாஸ்கர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு நவ.15க்கு ஒத்திவைப்பு

 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வருகின்ற நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image

கடந்த அதிமுக ஆட்சியில் 2013ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை 8 ஆண்டுகள் அதிமுக அமைச்சவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஊழல்கள் முறைகேடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டு இவர் அமைச்சராக இருந்தபோது இவரது வீடு உள்ளிட்ட இவருக்கு சம்பந்தமான பல்வேறு இடங்களில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா குட்கா முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அமலாக்கத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் சோதனை செய்தனர்.

அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 2021 அக்டோபர் மாதம் 18ம் தேதி தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் 2016 முதல் 21 வரை வருமானத்தை விட அதிகமாக 27 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் அசையா சொத்துக்கள் என பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீடு உள்ளிட்ட 56 இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் 23.85லட்சம் ரூபாய் ரொக்கம் 4.87 கிலோ தங்கம் 136 கனரக வாகனங்களின் சான்றுகள் 19 ஹார்ட்டிஸ்க் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருந்தனர்.

Image

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் பதியப்பட்ட வழக்கில் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்தை விட அதிகமாக 53 சதவீதம் குறிப்பாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இவரது பெயரிலும் இவரது மனைவி ரம்யா பெயரிலும் வாங்கி குவித்தது தெரிய வந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் கடந்த மே மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜராகி நீதிபதி ஜெயந்தி முன்பு 216 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த குற்றப்பத்திரிக்கையில் சென்னை டி நகரில் 14 கோடி ரூபாய் மதிப்பில் வீடு அசையும் சொத்துக்களான 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொழிற்சாலைகள் என 800 சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமாக வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவித்து பத்தாயிரம் பக்க சொத்து ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அந்த நீதிமன்றம் மூலம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சமன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இதுவரை நான்கு முறை இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் மூன்று முறை விஜயபாஸ்கரும் ஒருமுறை அவரது மனைவி ரம்யாவும் ஒரு முறை இவர்களது வழக்கறிஞர்களும் விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று ஐந்தாவது முறையாக இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் உள்ள விஜயபாஸ்கரோ அவரது மனைவி ரம்யாவோ நேரில் ஆஜராகவில்லை, அவர்களுக்கு பதிலாக அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். 

கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் ஏன் சொன்னார்?- அமைச்சர் விஜயபாஸ்கர்  விளக்கம் | Why did the Chief Minister say that God knows? - Minister  Vijayabaskar explained - hindutamil.in

இந்நிலையில் ஏற்கனவே விஜயபாஸ்கர் தரப்பினர் அவர் மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிக்காயின் நகல் முழுவதையும் கேட்ட நிலையில் தற்போது வரை அந்த நகல் முழுமையாக கொடுக்காததால் அடுத்த விசாரணைக்கு முன்பாக முழுமையான குற்றப்பத்திரிக்கை நகல் அனைத்தையும் விஜயபாஸ்கர் தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகின்ற நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.