உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்
உளவுத்துறை ஐஜியாக தேர்தல் ஆணையம் நியமித்திருந்த அவினாஷ் குமாரை மாற்றி உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க்கை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

யார் இந்த அஸ்ரா கார்க்?
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தவர் அஸ்ரா கார்க். அங்கேதான் பள்ளிப்படிப்பையும் முடித்திருக்கிறார். அதன்பிறகு தாபர் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர். இவரது பெற்றோர் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள். கடந்த 2004ம் ஆண்டில் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் நியமனம் செய்யப்பட்டார்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி சூப்பிரண்டாக பணியை தொடங்கினார். அதன்பிறகு 2008 ம் ஆண்டில் திருநெல்வேலி எஸ்பியாக பணியாற்றினார். 2010 வரை அங்கு பணியாற்றினார். இந்த வேளையில் கந்து வட்டிக்காரர்கள் வரை அதிரடி நடவடிக்கை எடுத்து பெயர் பெற்றார். இதற்காக சிறப்பு படை அமைத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதேபோல் சாதி பிரச்சனைகள் உள்ள இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தவர். அதன்பிறகு மதுரை எஸ்பியானார். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தினார். அவரது செயலுக்கு இந்திய தேர்தல் ஆணையமே பாராட்டு தெரிவித்தது.
உத்தரபுரத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த இருசமுதாயத்தினருக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண்டார். இருதரப்பு மக்களையும் நேரில் அழைத்து பேசி வெற்றி கண்டார். தலித் மக்களை கோவிலுக்கு செல்வதற்கான நடவடிக்கையை எடுத்து பாராட்டு பெற்றார். திருநெல்வேலி, மதுரை, தர்மபுரி என்று தான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு நடவடிக்கைகளை எடுத்தார். தர்மபுரி மாவட்டத்தில் இரட்டை குவளை முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர். சிறுநீரக மோசடி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தார்.பிறகு தேனி மாவட்டத்தில் பணியாற்றியபோது தேவதானப்பட்டியில் 2013ல் எச்ஐவி பாதிப்பு உள்ள நபருடன் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார். பிறகு மத்திய அரசு பணிக்கு சென்றார். டிஐஜி அந்தஸ்தில் மத்திய அரசு பணிக்கு சென்றார். சிபிஐ-யில் சூப்பிரண்டாக பணியாற்றினார். பிறகு அவர் தமிழ்நாட்டுக்கு மீண்டும் திரும்பினார். 2022ம் ஆண்டில் ஐஜியாக இருந்தார். தெற்கு மண்டல ஐஜியாக 2022ல் பணியாற்றினார். பிறகு சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் போலீஸ் கமிஷனராக செயல்பட்டார். 2024ம் ஆண்டில் வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றி தற்போது தமிழ்நாட்டின் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

