தேர்தல் நெருங்குவதால் திமுக புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது - வானதி சீனிவாசன்..!

 
1 1

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நெருங்குவதால் திமுக புதிது, புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இப்போது வரை தமிழகத்தின் கடன் சுமை பலமடங்கு அதிகரித்துள்ளது. தேர்தலுக்காக சில அறிவிப்புகள் மூலமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை, விவசாயிகள் மற்றும் பட்டியலின மக்களின் பிரச்சினைகளை எல்லாம் மூடி மறைக்க நினைக்கிறது தி.மு.க. அரசு.

மக்களை காப்பாற்றும் போலீசுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. சிறுவர்கள் எல்லாம் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் அவர்கள் குடும்பத்தில் அமைதி இல்லாமல், சமுதாயத்தில் அமைதி இல்லாமல் செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சேகர்பாபு விலகிவிடலாம். அவர் அமைச்சர் மாதிரி நடந்து கொள்ளாமல் பொதுஇடத்திலேயே அநாகரிகமாக பேசுகிறார். திமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என அனைவரும் எப்படியாவது இந்துக்களை இழிவுப்படுத்தி அதன்மூலம் சிறுபான்மையினர் வாக்குகள் வந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

கருத்து கணிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். மக்கள் கணிப்பு எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் இருக்கிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.