அவர்கள் இருக்கும் வரை நிச்சயம் ராமதாஸுடன் இணையப் போவதில்லை : அன்புமணி அறிவிப்பு..!
பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தச் சூழலில் ராமதாஸுடன் இணையப் போவதில்லை என்று அன்புமணி கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக சார்பில் உரிமை மீட்பு பயணப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தான் அன்புமணி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
ராமதாஸிடம் இருந்து தன்னை துரோகிகள் தான் பிரித்தாக தெரிவித்த அன்புமணி, ராமதாசை சுற்றி துரோகிகள், தீய சக்திகள் உள்ளனர் என்றும் அந்தத் துரோகிகள் இருக்கும் வரை அங்குச் செல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இங்கு அனைவருக்கும் நான் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். ராமதாஸிடம் இருந்து என்னைப் பிரித்து, இன்று அவரை சுற்றி துரோகிகள் இருக்கிறார்கள். அந்தத் துரோகிகள், தீய சக்திகள், திமுகவின் கைக்கூலிகள் இருக்கும் வரை நான் அங்குச் சேர மாட்டேன்.. நான் அங்கு இணையவும் மாட்டேன்.
ராமதாஸ் ஒரு சமூக சீர்திருத்தவாதி. கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிற்காகவும் தமிழ் சமூகத்திற்காகவும் உழைத்துக் கொண்டு இருப்பவர். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி.. ஆனால், அவரை இன்று திசைதிருப்பி, மனதை மாற்றி அங்குச் சில துரோகிகள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வரை நான் நிச்சயம் அங்குச் சேர மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நான் வலியோடும், மன உளைச்சல் உடனும் தான் உங்களிடம் சொல்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.


