அதிகாரத்தில் இருந்து பா.ஜ இறங்குவதற்கான 'கவுன்ட் - டவுண்' துவங்கிவிட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்..!

 
ArvindKejriwal speaking with Aam Aadmi Party members

டில்லி அரசின், 2021ம் ஆண்டு மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உட்பட 21 பேர் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. மேலும், 21 பேரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதில், மணீஷ் சிசோடியா ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக ஜாமின் வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கான அடிப்படை முகாந்திரம் கூட இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்து உள்ளது. இந்நிலையில், டில்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி நேற்று நடத்திய பொதுக்கூட்டத்தில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சதி செய்து என்னையும் ஆம் ஆத்மி தலைவர்களையும் சிறைக்கு அனுப்பினர். ஆனால், மிகுந்த நேர்மையானவர் என்ற சான்றிதழை ஆம் ஆத்மி தலைவர்களுக்கு நீதிமன்றம் தன் தீர்ப்பு வாயிலாக வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் பயப்படுகிறார். ஒரு கொடுங்கோலனுக்கு பயம் ஏற்படும்போது, அவரது ஆட்சியும் முடிவுக்கு வருகிறது என்பதுதான் வரலாறு. நாட்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்ட சோனம் வாங்சுக்கை, பிரதமர் நரேந்திர மோடி சிறைக்கு அனுப்பினார். இதனால், பெண் எம்.பி.,க்கள் தன்னைத் தாக்குவர் என பயந்து, பார்லி.,க்கு ஒரு நாள் முழுதும் மோடி செல்லவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் மோடி பயப்படுகிறார். நாட்டில், 12 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில், அனைத்துத் துறைகளும் சீரழிந்து விட்டன. கல்வி, சுகாதாரம் மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் நாட்டு மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

நாட்டு மக்கள், 'ரஹ்னே லயக் பாரத்' - வாழக்கூடிய இந்தியாவை விரும்புகின்றனர். ஆனால், தொலைநோக்கு பார்வை என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் வேலையை மோடி செய்து வருகிறார். அதேபோல, தலைநகர் டில்லியிலும் பா.ஜ., அரசு பொறுப்பேற்று ஓராண்டிலேயே மாநகரை சீர்குலைத்து விட்டது. டில்லி மாநகர் முழுதும் சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. மாசு கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலத்தான் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். சதிச் செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நாடு முழுதும் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்ற பிரதமர் மோடி உழைக்கிறார். ஆனால், நாட்டுக்காக நான் உழைக்கிறேன். நான், ஐ.ஐ.டி.,யில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உயர்ந்த பதவிக்கு சென்றிருக்கலாம். ஆனால், எல்லோரும் வெளிநாடு சென்றால், தாய்நாட்டை யார் கவனிப்பது? என்று தான் சிந்தித்தேன்.

வருமான வரித்துறை ஆணையராக நான் பதவி வகித்த போது, மிகுந்த நேர்மையுடன் பணியாற்றினேன். என் நேர்மை பற்றி டில்லி மக்களுக்கு நன்றாகவே தெரியும். கடந்த, 2011ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி இதே ஜந்தர் மந்தரில் கூடியிருந்த மக்கள் வெகுண்டு எழுந்தனர். அதைத் தொடர்ந்து, ஆட்சி பீடத்தில் இருந்து காங்கிரஸ் துாக்கி எறியப்பட்டது. அதேபோல, இன்றும் அதைவிட அதிகளவில் மக்கள் கூடியிருக்கின்றனர். டில்லியில் மட்டுமல்ல மத்தியிலும் பா.ஜ., ஆட்சி துாக்கி எறியப்படுவதற்கான நாள் வெகு துாரத்தில் இல்லை. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். அதிகாரத்தில் இருந்து, பா.ஜ.,வை இறக்குவதற்கான, 'கவுன்ட் - டவுண்' துவங்கி விட்டது. இவ்வாறு அவர் பேசினார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங், ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், டில்லி மாநில ஆம் ஆத்மி தலைவர் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் பேசினர்.