அருணாச்சல் ஹெலிகாப்டர் விபத்து : உயிரிழந்த வீரர் தமிழர் என தகவல்..

அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது!
அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் சங்கே கிராமத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் ராணுவ ஹெலிக்காப்டரில் லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோர், அசாம் மாநிலம் சோனிப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளனர். ஆனால் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமானிகள் உடனான தகவல் இணைப்பு தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து போம்டிலாவின் மேற்கே மண்டலா ஹில்ஸ் பகுதிக்கு அருகே ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய அதே பகுதியில் 2 பைலட்டுகளின் உடலும் கண்டறியப்பட்டது.
மதியம் 12.30 மணியளவில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக மலைமீது மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்தில் இறந்த விமானிகள் லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்பது அடையாளம் காணப்பட்டது. இதில் மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டில் உள்ள தேடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களது உடல்கள் டெல்லி விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதன் பின்னர் லெப்டினன்ட் ரெட்டியின் உடல், அவரது சொந்த மாநிலமான அந்திராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேஜர் ஜெயந்த்தின் உடல் திருச்சி செல்லும் விமானம் மூலமாகவோ அல்லது மதுரை செல்லும் விமானம் மூலமாகவோ கொண்டு வரப்பட உள்ளது. அங்கிருந்து மாவட்ட ஆட்சியர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு தேனி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.