இன்று முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..!

 
மகளிர் உரிமைத்தொகை - விண்ணப்பப் படிவம் வெளியீடு மகளிர் உரிமைத்தொகை - விண்ணப்பப் படிவம் வெளியீடு

 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை இன்று சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கும் நிலையில், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்.  

அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கும் வகையில்  ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்னும் புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று  கடலூர் சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார்.  இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்பட உள்ளன.  இதற்காக நவம்பர் மாதம் வரை மாநிலம் முழுவதும் மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தபடுகின்றன.  

மகளிர் உரிமை

அதன்படி, நகர்புற பகுதியளில் 3,768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்படுகின்றன.  முதல்கட்டமாக இன்று  (ஜூலை 15) தொடங்கும் இந்த முகாம்கள் ஆகஸ்ட் 15ம் தேதி வரை வெவ்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன. இந்த  முகாம்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களிலேயே இரண்டாம் கட்டமாக  கலைஞர் மகளிர் உரிமை பெறுவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.  தகுதியுடைய மற்றும் விடுபட்ட பெண்கள் இந்த முகாம்களுக்குச் சென்று  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா சொன்ன தகவல்கள் இதோ..!!

ஏற்கனவே ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள், அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், ஆதரவற்ற - கணவரால் கைவிடப்பட்ட மற்றும் விதவை ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள் ஆகியோரும் தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதனிடையே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக நேற்று (ஜூலை 14) தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிதம்பரம் சென்றார். அங்கு திமுக நிர்வாகிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து  2 நாட்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர்,  புதன்கிழமை அன்று சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.