ஆகஸ்ட் 6ம் தேதி கலைஞர் நினைவு மாரத்தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

கலைஞர் நினைவு மாரத்தான் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
லிபர்ட்டி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணி விழாவையொட்டி , எழுச்சி தமிழன் லிபர்ட்டி மாரத்தான் 2023, ஓட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி இந்த மாரத்தான் நடைபெற உள்ள நிலையில், இணையதள பதிவு மற்றும் மாரத்தான் ஓட்ட டி.சர்ட் அறிமுக நிகழ்ச்சி வேளச்சேரி குருநானக் கல்லூரி கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, இணையதள பதிவு மற்றும் மாரத்தான் லோகோ மற்றும் டி.சர்ட்டினை அறிமுகப்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், “இளைய சமுதாயத்தினர் மத்தியில் மாரத்தான் மிகவும் பிரபலாகி வருகிறது. கலைஞர் நினைவு மாரத்தான் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 4ம் ஆண்டு நினைவு மாரத்தான் ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான பதிவு ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாரத்தானில் 1 லட்சத்திற்கும் மேலானோர் பங்கேற்க உள்ளனர். உலகிலேயே அதிகம் பேர் பங்கேற்ற மாரத்தானாக கலைஞர் நினைவு மாரத்தான் இருக்கும். திருமாவளவன் மணி விழாவினையொட்டி ஆகஸ்ட் 13ம் தேதி நடக்கும் மாரத்தானில் நாங்களும் கலந்துகொள்ள உள்ளோம். இதில் நான் 10 கிலோமீட்டர் தூரம் ஓட இருக்கிறேன். நடப்பது, ஓடுவது உடற்பயிற்சியில் சிறந்தது. இதற்கான ஒரு அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் சுகாதாரத்துறை அறிவிக்கவுள்ளது” என்று தெரிவித்தார்.