காலையில் கைது... மாலையில் கட்சியிலிருந்து நீக்கம்..! – நகை திருட்டில் சிக்கிய தவெக நிர்வாகியால் பரபரப்பு!
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் சண்முகவள்ளி (வயது 70). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர் தனது பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்ட நிலையில், கணவர் இறப்புக்கு பிறகு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த சுமார் 13 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் சண்முகவள்ளி புகார் அளித்துள்ளார்.
மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, மூதாட்டியின் வீட்டிற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மறைத்துவிட்டு வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த மற்ற சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டுபிடித்தனர்.
அந்த நபர், புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த இசக்கிராஜா என்பதும், இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஜூஸ் கடை நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இசக்கிராஜா தமிழக வெற்றிக் கழகத்தின் நெல்லை வடக்கு மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இசக்கிராஜாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கட்சி நிர்வாகத்திற்கு தெரியவந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
த.வெ.க., எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் மீது எழுந்து வரும் தொடர் புகார்களால் நேற்று முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தவெக நிர்வாகி ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

