ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- ரவுடி நாகேந்திரன் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதித்திட்டத்தை தீட்டியதாக ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 23 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதித்திட்டத்தை தீட்டியதாக ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். நாகேந்திரன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 24 வது நபராக நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனின் மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.