"இந்தி திணிப்பு நிரூபிச்சா 1 லட்சம் தரேன்"- அர்ஜுன் சம்பத் ஆவேச பேச்சு

தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கை புத்தகத்தை வைத்து பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத்,"உலகத்தில் தாய் மொழி மிக முக்கியமானது, தமிழ் மொழி தெய்வீகமானது, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நிலை நாட்டப்பட வேண்டும், தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும், தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை மட்டுமே கற்பிக்க வேண்டும், ஐந்தாம் வகுப்புக்கு மேலாக முன்மொழி கல்விக் கொள்கை அமுல்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்துவதாகும்.
தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன், தமிழகத்தில் உள்ள குழந்தைகளிடம் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை, தமிழகத்தில் தாய்மொழி கல்வி தரம் தாழ்ந்ததாக உள்ளது, தாய்மொழி வாயிலாக மாநிலங்களில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும், தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடச்சட்டமாக அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் உள்ள வியாபார நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை என்கிற துறை செயல்படுகிறதா?, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் தமிழ் தாய் வாழ்த்து திராவிட வாழ்த்தாக உள்ளது, தேவாரம், திருவாசகம், பாரதியார் பாடல்களில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்பட வேண்டும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைப்போம்.
தமிழும், சமஸ்கிருதமும் வேறு வேறு மொழி அல்ல, இரு மொழிகளும் ஒரே மொழி தான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் மத்திய அரசு நிதி தருவேன் என சொன்னது சரிதான், மத்திய அரசு திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்தியதாக தமிழக அரசு கணக்கு காட்டி உள்ளது, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திலும் அமுல்படுத்தப்பட வேண்டும், மத்திய அரசிடம் நிதி பெற்று தமிழக அரசு ஆங்கில மொழியை வளர்க்கிறது, மத்திய அரசின் நிதியை தமிழக பள்ளிக்கல்வித்துறை தவறாக பயன்படுத்தி வருகிறது, தமிழகத்தில் கல்வியை தேசிய மயமாக்க வேண்டும், தமிழகத்தில் தனியாக பள்ளிக்கல்வித்துறை தேவை இல்லை, தமிழக பள்ளிக்கல்வித்துறையை தேசிய பள்ளிக்கல்வி துறையாக மாற்ற வேண்டும், தமிழகத்தில் நிலவும் பாலியல் வன்கொடுமைகளை திசை திருப்பும் விதமாக ஹெட் ஆவுட் மோடி என சொல்லப்படுகிறது, தமிழ்நாடு அரசு ஆங்கிலத்தை படிக்க சொல்கிறது, மத்திய அரசு தமிழை படிக்க சொல்கிறது" என கூறினார்.