அர்ஜூன் சம்பத் குண்டுகட்டாக கைது
கோவையில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் குண்டுகட்டாக கைது செய்யபட்டார்.
கோவை ஈஷா யோகா மையம் குறித்தான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் வார இதழை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்பாட்டம் மேற்கொள்ள இறந்த நிலையில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென கட்சி தொண்டர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செஞ்சிலுவை சங்கம் நோக்கி 20 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் பேரணியாக சென்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் பேரணியாக செல்வதற்கும் அனுமதி இல்லை என்று கூறியதை தொடர்ந்து திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அர்ஜுன் சம்பத் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்தோடு மட்டுமின்றி போராட்டம் நடத்த வந்த இந்து மக்கள் கட்சியினர் மற்றும் இந்து அமைப்பு சார்ந்தவர்கள் போராட்டம் நடத்து முன்பாக பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதில் வேலை வாய்ப்பு தொடர்பான மீட்டிங் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களை இந்து மக்கள் கட்சியினர் அழைத்து வந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர் . டிரைவர் ஒருவர் என்ன போராட்டம் என்றே தெரியாமல் வந்து போலீசாரிடம் சிறைப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்.