பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு இடையே தகராறு- தட்டி கேட்ட தவெக நிர்வாகி மீது தாக்குதல்

 
பட்டாசு பட்டாசு

நாகையில் பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தட்டி கேட்ட தவெக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாணப்படுத்தி தாக்குதல்


நாகை பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜா. தமிழக வெற்றிக்கழக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளரான ராஜாவின் அண்ணன் மகன் லோகேஷ் என்பவருக்கும், செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜெயக்குமாரின் உறவினர் மகனுக்கும் இடையே பட்டாசு வெடிப்பதில் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை பார்ப்பதற்காக நள்ளிரவு இரு தரப்பினரும் அங்கு வந்திருந்தனர். அப்போது பட்டாசு வெடித்த சிறுவர்களை அடித்தது நியாயமா என தட்டி கேட்டு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ராஜா சத்தம் போட்டு உள்ளார். அப்போது அங்கிருந்த ஜெயக்குமார் ஆத்திரமடைந்து தான் கையில் மறைத்து வைத்திருந்த கோணி ஊசியால் ராஜாவின் வயிற்றில் இரண்டு இடத்தில் குத்தி கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ராஜா வயிற்றிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறி அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனை வாசலில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், ராஜாவை மீட்டு நாகை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். இதையடுத்து ராஜாவை நாகை அரசு மருத்துவமனை முன்பு நின்றிருந்த 108 ஆம்புலன்ஸில் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது திடீரென வாகனம் செல்ப் எடுக்காமல் போனது.

இதனால் பதற்றத்தில் இருந்த ராஜாவின் நண்பர்கள் வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயற்சித்தனர். அது பலன் அளிக்காமல் போகவே, அங்கு வந்த தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் சுகுமாறன் அவரது வாகனத்தில் ராஜாவை ஏற்றிக் கொண்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் வயிற்றில் தையல் போட்டு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் ராஜாவை கோணி ஊசியால் குத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவான ஜெயக்குமாரை இன்று கைது செய்தனர். நாகையில் வெடி வெடித்த தகராறில் தவெக நிர்வாகியை வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.