ஆண்டுக்கு 4 நாட்கள் ஏரியா சபை கூட்டம் - முதல்வர் உத்தரவு..

 
stalin

ஏரியா சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

 ஊரக உள்ளாட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது போல நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக ஏரியா சபை (நகர சபை) கூட்டங்களை நடத்த வேண்டுமென  தமிழக அரசு கடந்த ஆண்டு  அரசாணை வெளியிட்டது. அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் குழுக்களும் அமைக்கப்பட்டன.  அதிலும், சென்னை மாநகராட்சியை தவிர்த்து மற்ற பகுதிகளில்  கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினம் அன்று முதல் ஏரியா சபை கூட்டம்  நடைபெற்றது.

ஏரியா சபை
 
இந்த ஆண்டு ஏரியா சபை கூட்டங்கள் நடத்துவது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், கிராமசபை கூட்டம் போன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுக்கு 4 நாட்கள் ஏரியா சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ,  அண்ணா பிறந்த தினமான செப்.15 ம் தேதி, சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10ம் தேதிகளில்  ஏரியா சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.