அரசியலை விட்டு விலக தயாரா ? தொழில் அதிபர் காலில் உதயநிதி விழும் வீடியோ சிக்கியது..!

 
1

தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களும் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டுவதால் திரைப்படங்களை போல் அரசியல் களமும் சுவரசியம் நிறைந்துள்ளது.  உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கலில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பேசிய போது அவரது ஸ்டைலில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் வைக்கப்பட்ட செங்கலை காண்பித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கு, ஒரே ஸ்க்ரிப்டை யூஸ் செய்ய வேண்டாம்”, என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

பதிலுக்கு, ஏய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவின் போது பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை காண்பித்து ”நானாவது கல்லை காண்பிக்கிறேன், இங்கு ஒருவர்(பல்லை) காட்டுகிறார்” என உதயநிதி பதிலடி கொடுத்தார்.

தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட இ.பி.எஸ். பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருக்கும் புகைப்படத்தை காண்பித்து பாஜக-திமுக இடையே தான் கள்ளக் கூட்டணி என விமர்சித்து பேசியது திமுகவினரை சூடேற்றியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி பரப்புரை செய்த போது, கூவத்தூரில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் அறிவிக்கப்பட்ட போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தை காண்பித்து காட்டமாக விமர்சித்தார்.

அதுமட்டுமின்றி, ”இதுபோன்ற புகைப்படத்தை எடப்பாடி பழனிசாமி காட்டினால் நான் அரசியலில் இருந்து விலக தயார்” என உதயநிதி பேசியது அதிமுகவினரை ஆத்திரமடைய செய்தது.

உதயநிதி ஸ்டாலின் எங்காவது, யாருடைய காலிலாவது விழும் புகைப்படமோ அல்லது வீடியோ கிடைக்காதா என சல்லடை போட்டு அதிமுகவினர் தேடிய நிலையில், உதயநிதி ஒருவரது காலில் விழும் வீடியோவை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கிறார்கள்.

கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி அமைச்சராக பதவியேற்ற போது நடந்த விழாவில், அவரது குடும்பத்தினர்கள் அருகில் இருந்த போது, ஒருவரது காலில் உதயநிதி விழுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் இருக்கும் நபரின் பெயர் ராஜா சங்கர் என சொல்லப்படுகிறது. மேலும், உதயநிதியின் பட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸின் கணக்கு விவரங்களை ராஜா சங்கர் பார்ப்பதாக கூறப்படுகிறது.

ராஜா சங்கரின் மகன் அர்ஜூன் துரையும் அமைச்சர் உதயநிதியும் சேர்ந்து தான் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தை தொடங்கியதாக சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது.

தற்போது ராஜா சங்கரின் காலில் அமைச்சர் உதயநிதி விழுந்து ஆசி பெறும் வீடியோவை ஷேர் செய்து அரசியலில் இருந்து விலக தயாரா? என சமூக ஊடகங்களில் அதிமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.