திருச்செந்தூர் போறீங்களா? அப்போ உங்க செல்போனை 'இங்க' வச்சிட்டு போங்க..! கோவில் நிர்வாகம் புதிய உத்தரவு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100 விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே பக்தர்கள் கோவிலுக்கு வரும்போது தங்களது செல்போன்களை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது தங்களது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்து விட்டு சாமி தரிசனம் செய்ய வருகை தர வேண்டும்.
மேலும், பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் கைபேசி பாதுகாப்பு வைப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.
இதுதவிர பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி, பொது அறிவிக்கை அமைப்பு, ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் செல்போன் பயன்படுத்த தடை அமலில் இருந்து வருகிறது. தற்போது அந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, அனைத்து தரிசன வரிசைகளிலும் உள்ள நுழைவு வாயில்களில் பக்தர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சோதனையின்போது பக்தர்களிடம் செல்போன் இருப்பது கண்டறியப்பட்டால், பாதுகாப்பு நடைமுறைகளின்படி அவை பறிமுதல் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ வைத்துவிட்டு கோவிலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கைபேசி பாதுகாப்பு வைப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேவையெனில், பக்தர்கள் தங்களது செல்போன்களை அங்கு ஒப்படைத்து பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

