தல தீபாவளி கொண்டாட போறீங்களா? தாய்லாந்தில் ஒரு மாதத்திற்கு ஃப்ரீ என்ட்ரி..!!

 
Q

இந்தியர்களுக்காக தாய்லாந்து அரசாங்கம் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை ஏற்பாடு செய்துள்ளது. 'அமேசிங் தாய்லாந்து கிராண்ட் தீவாளி ஃபெஸ்டிவல் 2026' (Amazing Thailand Grand Diwali Festival 2026) என்ற பெயரில், பேங்காங்க், பட்டாயா மற்றும் ஃபுகெட் ஆகிய நகரங்களில் சுமார் 4 வார காலத்திற்கு தீபாவளித் திருவிழா நடைபெறவுள்ளது. இந்திய தாய்லாந்து வர்த்தக மற்றும் சுற்றுலா சங்கம், தாய்லாந்து சுற்றுலாத்துறை மற்றும் பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

நவம்பர் 3 முதல் நவம்பர் 29 வரை நடைபெறவுள்ள இந்த விழாக்கள் அனைத்திற்கும் கட்டணம் எதுவுமின்றி முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படும். தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 8 அன்று முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதாவது, பாலிவுட் இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளக்கேற்றும் சடங்குகள், இந்திய உணவுத் திருவிழாக்கள் மற்றும் கலாச்சாரப் பேரணிகள் இந்த 4 வார விழாவை அலங்கரிக்கவுள்ளன.

2025-ல் 22 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வருகை தந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் அதை 25 லட்சமாக உயர்த்த தாய்லாந்து சுற்றுலாத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

பேங்காங்க் 

நவம்பர் 3 முதல் 4: 'சென்ட்ரல் பங்ராக்' பகுதியில் 'தி ஃபர்ஸ்ட் லைட்' என்ற தொடக்க விழா விளக்கேற்றலுடன் தொடங்குகிறது.

நவம்பர் 6 முதல் 8 வரை: 'ஐகான்சியாம்' (ICONSIAM) ரிவர்பார்க் பகுதியில் சாவோ பிரயா (Chao Phraya) நதிக்கரையில் 'லோட்டஸ் பை தி ரிவர்' விழா நடக்கிறது. தீபாவளியான நவம்பர் 8 அன்று பிரம்மாண்ட நதிக்கரை வானவேடிக்கை இடம்பெறும்.

நவம்பர் 20 முதல் 24 வரை: பேங்காங்கின் 'லிட்டில் இந்தியா' என அழைக்கப்படும் பஹுரத் (Phahurat) பகுதியில் 'த்ரெட்ஸ் ஆஃப் ஃபெய்த்' விழா நடக்கிறது. நவம்பர் 24 பௌர்ணமி அன்று தேவ் தீபாவளி, லாய் கிராத்தோங் மற்றும் குருபூர்வ ஆகிய 3 பண்டிகைகளும் ஒன்றாக கொண்டாடப்படும்.

நவம்பர் 26 முதல் 29 வரை: 'எம் குவார்டியர்' பகுதியில் 'மியூசிக் ஆன் தி அவென்யூ' என்ற பாலிவுட் இசை நிகழ்ச்சியுடன் 4 வாரத் திருவிழா நிறைவடைகிறது.

பட்டாயா 

நவம்பர் 7 முதல் 15 வரை: 'சென்ட்ரல் ஃபெஸ்டிவல் பட்டாயா பீச்' பகுதியில் 'ஈவினிங்ஸ் பை தி சீ' என்ற கடற்கரை விழா நடக்கிறது.

நவம்பர் 13 முதல் 15 வரை: 'பட்டாயா பீச் ரோட்' பகுதியில் கடற்கரை ஓரங்களில் விளக்கேற்றும் 'லேம்ப்ஸ் அலாங் தி ஷோர்' விழா நடைபெறுகிறது.

ஃபுகெட் 

நவம்பர் 8 (தீபாவளி நாள்): 'சென்ட்ரல் ஃபெஸ்டிவல் படாங்' பகுதியில் 'ஏ சண்டே ஆஃப் ஃபிளேவர்' என்ற பிரம்மாண்ட இந்திய உணவுத் திருவிழாவும், தீபாவளி கொண்டாட்டங்களும் நடைபெறவுள்ளன.

2027-ஆம் ஆண்டில் இந்தியா - தாய்லாந்து இடையேயான 80 ஆண்டுக்கால ராஜாந்திர உறவை கொண்டாடும் விதமாகவும், தாய்லாந்தில் வாழும் இந்திய சமூகத்தினரின் பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்த விழா நடைபெறுகிறது.