"சொந்த வீடு கட்ட போறீங்களா?" – தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அதிரடி புதிய கட்டட விதிகள்!
Oct 28, 2026, 13:41 IST1793175092647
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019இல் பல்வேறு திருத்தங்களைச் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், அரசாணை படி இந்தத் திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த உத்தரவிபடி,
சாலையை ஒட்டிய தளங்களுக்கான விதிகள்
- ஏற்கெனவே 18.30 மீட்டராக இருந்த கட்டட உயரம் தொடர்பான அளவு, திருத்தப்பட்ட விதிகளில் 19.50 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
- முதன்மை குடியிருப்புப் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்ட இடங்களில், 12 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட அகலமுள்ள சாலைகளை ஒட்டியுள்ள மற்றும் அந்தச் சாலைகள் வழியாக அணுகக்கூடிய தளங்கள் வணிகப் பயன்பாட்டுப் பகுதிகளாகக் கருதப்படும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
- சென்னை பெருநகரப் பகுதிக்கு வெளியே, 9 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட அகலமுள்ள சாலைகளை ஒட்டியுள்ள தளங்களுக்கும் இதேபோன்ற வணிகப் பயன்பாட்டு விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
ஐடி வாகன நிறுத்த விதிகள்
- தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் மற்றும் உயிரித் தகவலியல் மையங்களுக்கான வாகன நிறுத்த விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
- இதன்படி, ஒவ்வொரு 75 சதுர மீட்டர் தரைப்பரப்புக்கும் ஒரு கார் நிறுத்துமிடமும், ஒவ்வொரு 50 சதுர மீட்டர் தரைப்பரப்புக்கும் ஒரு இருசக்கர வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்த வேண்டும்.
ஹோட்டல்களுக்கான விதிகள்
- ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விருந்தினர்களின் வாகனங்களுக்கான நிறுத்துமிடத் தேவைக்கு ஏற்ப, ஓட்டுநர்கள் தங்குவதற்கான தங்குமிட வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- ஒவ்வொரு கார் நிறுத்துமிடத்துக்கும் ஒரு படுக்கை வசதி கொண்ட தங்குமிடத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தத் தங்குமிடத்தில் ஒவ்வொரு 8 படுக்கைகளுக்கும் அல்லது அதில் ஒரு பகுதிக்கு ஒரு தனி கழிப்பறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும். இந்த வசதியை ஹோட்டல் அல்லது தங்கும் விடுதி வளாகத்திற்குள் அல்லது 250 மீட்டர் சுற்றளவுக்குள் அமைக்கலாம்.
திறந்த சமையலறை விதிகள்
கட்டட விதிகளில் திறந்த சமையலறை என்பதற்கான வரையறை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
- சமையலறைக்கும் அதனை ஒட்டிய வரவேற்பறை, உணவருந்தும் அறை அல்லது பிற பயன்பாட்டு அறைக்கும் இடையே சுவர் போன்ற உடல் ரீதியான பிரிப்பு இல்லாத அமைப்பு திறந்த சமையலறை என வரையறுக்கப்பட்டுள்ளது.
கழிப்பறை, வாஷ் பேசின் விதிகள்
- மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளில் வாஷ் பேசின் மற்றும் கைப்பிடிகளை அமைப்பதற்கான அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- வாஷ் பேசினுக்கு முன்பாக 900 மி.மீ. அகலம், 1,200 மி.மீ. ஆழம் கொண்ட தடையற்ற தரைப்பரப்பு இருக்க வேண்டும். வாஷ் பேசினுக்குக் கீழே முழங்கால் வசதிக்காக 480 மி.மீ. உயர இடைவெளி வழங்க வேண்டும். வாஷ் பேசினின் மேற்பகுதி தரையிலிருந்து 750 முதல் 850 மி.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.
- கழிப்பறையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் அமைக்கப்பட வேண்டும். அவை கழிப்பறையின் மையக் கோட்டிலிருந்து 300 முதல் 350 மி.மீ. இடைவெளியில் பொருத்தப்பட வேண்டும்
என கட்டட விதிகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளுக்கான அரசாணையில் தமிழ்நாடு அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

