ரேஷன் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..? இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!
உணவு பொருட்கள் பெறுவதை தாண்டி, லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முதல், பொங்கல் பரிசு தொகுப்பு, நிவாரண உதவிகள் வரை அனைத்து உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகின்றன. இதனால் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்பவர்கள் என பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால், இவ்வாறு விண்ணப்பிக்கும் பலர், சில முக்கிய தவறுகளை செய்வதால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு பல மாதங்கள் அலைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களை தவிர்க்க, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய மற்றும் முக்கியமான தவறு, தங்களின் பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்காமல் விண்ணப்பிப்பது தான். குறிப்பாக, புதிதாக திருமணம் ஆன தம்பதியின, கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும், தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டுகளில் இருந்து தங்களின் பெயர்களை முறைப்படி நீக்கிய பின்னரே, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருவரின் பெயர், ஒரே நேரத்தில் இரண்டு ரேஷன் கார்டுகளில் இடம்பெற கூடாது என்பது அரசின் விதி. பெயரை நீக்காமல் விண்ணப்பிக்கும்போது, ஏற்கனவே உள்ள தரவுத்தளத்தில் உங்கள் பெயர் இருப்பது தெரிய வந்து, விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும். எனவே, பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்றிதழை பெற்ற பிறகே, புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பது அவசியம்.
விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம், தவறான முகவரியை வழங்குவது. விண்ணப்பித்த பிறகு அரசு அதிகாரிகள், நீங்கள் கொடுத்த முகவரிக்கு நேரில் வந்து கள ஆய்வு செய்வார்கள். அப்போது விண்ணப்பதாரர் அந்த முகவரியில் வசிக்கிறாரா என்பதை உறுதி செய்வார்கள். தவறான முகவரி கொடுத்தாலோ அல்லது ஆய்வின்போது வீட்டில் யாரும் இல்லை என்றாலோ, உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, தற்போது வசிக்கும் சரியான முகவரியை, வீட்டு எண், தெருப் பெயர் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும், முகவரிக்கான சரியான ஆதாரமாக ஆதார் அட்டை, கேஸ் சிலிண்டர் பில் அல்லது வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் போன்ற ஆவணங்களை இணைப்பது அவசியம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், வயது மற்றும் ஆதார் எண்களை எந்தவிதமான எழுத்து பிழைகளும் இன்றி, சரியாக பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யப்படும் குடும்ப தலைவரின் புகைப்படம் மற்றும் மற்ற ஆவணங்களின் நகல்கள் தெளிவாக இருக்க வேண்டும். மங்கலான அல்லது புரியாத ஆவணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
விண்ணப்பத்தின் நிலையை SMS மூலம் தெரிந்து கொள்ளவும், OTP பெறவும், செயல்பாட்டில் உள்ள சரியான மொபைல் எண்ணை வழங்குவது மிகவும் முக்கியம்.
இந்த எளிய வழிமுறைகளை கவனத்துடன் பின்பற்றினால், எந்தவிதமான தாமதமும், அலைச்சலும் இன்றி, புதிய ரேஷன் கார்டை எளிதாகவும், விரைவாகவும் பெறலாம். இதன் மூலம், அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முழுமையாக பெற்றுப் பயன்பெற முடியும்.

