"அரசியலுக்கு வருவீர்களா?" - தொடர் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சசிகுமார்!

 
sasikumar

‘வதந்தி 2’ என்ற வெப் தொடரில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார், இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சசிகுமார், “நான் இதுவரை சுமார் 30 படங்களில் நடித்துள்ளேன். ஆனால், என்னை இதுவரை யாரும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் யோசிக்கவே இல்லை. முதன்முதலில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று ‘வதந்தி 2’ இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் கூறியபோது என்னால் நம்பவே முடியவில்லை.

ஏனெனில், மதுரையை சேர்ந்த கதை என்றாலே, எங்களை ரவுடிகளாகத்தான் திரையில் காட்டுவார்கள். ஆனால், காவல் அதிகாரி கதாபாத்திரம் என்று இயக்குநர் கூறியதும்தான் கதையைக் கேட்கவே ஆரம்பித்தேன்.

நிரபராதியை காப்பாற்றுவதற்காக ஒரு காவல் அதிகாரி போராடும் கதையாக ’வதந்தி 2’ அமைந்துள்ளது. கதையை கேட்டவுடனையே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து ’வதந்தி 2’ வெப் தொடரின் படப்பிடிப்பு நடைபெறும். அதனால் சில நாட்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

சினிமாவை பொறுத்தவரை அனைத்துமே மாறிவிட்டது. ஆனால், அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி மட்டும் இன்னும் மாறவே இல்லை. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் நடிக்கத்தான் வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு திரைப்படம் என்பது இரண்டு மணிநேரத்தில் முடிந்துவிடும். ஆனால், ஒரு வெப் சீரிஸ் ஐந்து மணிநேரம் வரை நீளும். அதனால் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் சம்பளம் அதிகமாக கேட்டிருக்கலாமோ என்று கூட எனக்கு தோன்றியது.

’வதந்தி 2’ படபிடிப்பின்போது நானும் ஒரு இயக்குநர் என்ற அடிப்படையில் சில நேரங்களில் என்னுடைய ஆலோசனைகளையும் கூறுவேன். அதை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பது இயக்குநரின் விருப்பம். இது அவருடைய கதை அதைப் பற்றிய தெளிவான பார்வை அவருக்கு தான் இருக்கும்” என்று நடிகர் சசிக்குமார் தெரிவித்தார்.