சென்னைவாசியா நீங்கள்? செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்..!!
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் இன்று நமாநகராட்சி சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, விதிகள் 2023, பிரிவு 292-இன் படி பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், அவற்றை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு முறையான உரிமம் பெறாத உரிமையாளர்களுக்கு, நவம்பர் 24-ஆம் தேதி முதல் ரூ.5,000 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள் வளர்ப்பிற்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்கம், தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் ஆகியவற்றிற்கு செல்லப்பிராணிகள் உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
தங்கள் செல்லப்பிராணிகளை மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
பொது இடங்களுக்கு செல்லப்பிராணிகளை அழைத்து செல்லும்போது, கழுத்து பட்டை, முகமூடி இல்லாமல் அழைத்து செல்லக்கூடாது.
செல்லப்பிராணிகள் பொது இடங்களில் கழிவு ஏற்படுத்த கூடாது. அவ்வாறு செய்தால் அதற்கு உரிமையாளரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
மேற்கொண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு செல்லப்பிராணிகள் உரிமம் பெற ஒரு மாத கால அவகாசம் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இக்காலகட்டத்திற்கு பிறகும் உரிமம் பெறாத செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் மீது நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் உரிய அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் நவம்பர் 24 ஆம் தேதி முதல் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
செல்லப்பிராணிகளை பொது இடங்களில் அழைத்து செல்லும்போது கழுத்து பட்டை இன்றி அழைத்து சென்றால், உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இப்பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்பார்வையிட்டு, வீடுகள்தோறும் கள ஆய்வுகளை மேற்கொண்டு அபராதம் விதிப்பர். அபராதத் தொகையானது கோட்ட சுகாதார ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் மூலம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை நவம்பர் 24-ஆம் தேதி அமல்படுத்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


