பிஎஃப் கணக்கு வைத்திருப்பவரா நீங்க? இன்று முதல் மாறப்போகும் விதிமுறை..!

 
Provident Fund Rate  PF மீதான வட்டி 8.10% லிருந்து 8.15% ஆக உயர்வு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) தனது அமைப்பை மிகவும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்ததாக மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இனி பிஎஃப் கிளைம் செட்டில்மென்ட்களுக்காக நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மே 1 முதல், சந்தாதாரர்கள் யூபிஐ வசதியைப் பயன்படுத்தி நேரடியாக தங்கள் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

தற்போது பிஎஃப் பணம் எடுக்கும் செயல்முறைக்கு 7 முதல் 15 நாட்கள் ஆகிறது. ஆனால் யூபிஐ கட்டண முறையின் ஒருங்கிணைப்பு இந்த செயல்முறையை மேலும் விரைவுபடுத்தும் என்று கூறப்படுகிறது. அவசர காலங்களில் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் நிதியை சில மணி நேரங்களுக்குள் பெறுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் ஆகும். அதற்காகவே இந்த வசதி கொண்டு வரப்படுகிறது.

ஆரம்பத்தில், யூபிஐ மூலம் தினசரி பணம் எடுப்பதற்கான வரம்பு நிர்ணயிக்கப்படலாம். மருத்துவ அவசரத் தேவைகள் அல்லது கல்வி போன்ற சிறிய அட்வான்ஸ்களுக்கு நீங்கள் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான தொகையை யூபிஐ மூலம் உடனடியாக எடுக்க முடியும்.

இந்த அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் UAN (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) உங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், யூபிஐ ஐடிக்காக அதே மொபைல் எண் உங்கள் வங்கி மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உங்களுடைய பிஎஃப் கணக்கிலிருந்து மோசடியாகப் பணம் எடுப்பதைத் தடுக்க, யூபிஐ பரிவர்த்தனைகள் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் OTP அடிப்படையிலான பாதுகாப்பு உள்ளிட்ட பல அடுக்கு அங்கீகாரத்தைப் பயன்படுத்தும். எனவே இந்த மாற்றத்தின் கீழ் ஊழியர்களின் பிஎஃப் பணம் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த விதிமுறை 2026 மே 1 முதல் அமலுக்கு வருகின்றன. EPFO இந்த புதிய வசதியை விரைவில் தனது அதிகாரப்பூர்வ செயலியான உமாங் மற்றும் இணையதளத்தில் சேர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிற்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க, சந்தாதாரர்கள் தங்களின் KYC விவரங்களை இப்போதே புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.