இப்போதான் அறிவிக்கிறாங்களா? 2023-லேயே வந்துடுச்சே! 15 நாள் மகப்பேறு விடுப்பு அறிவிப்பால் ஆண் ஊழியர்கள் அதிர்ச்சி
தமிழக அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஆண் ஊழியர்களுக்கும், தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்க பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது, தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானது. இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மன ரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.
அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவது, தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
அதேபோன்று, அரசு ஆண் ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படுவது, குடும்ப பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.
எனவே, திருமணமான அரசு ஆண் ஊழியர்கள், மகப்பேறு காலத்தில் தன் மனைவியுடன் இருப்பதற்கு ஏதுவாக, 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த விடுப்பை, குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்கு உள்ளாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் 15 நாள் மகப்பேறு விடுப்பு முதல்வர் அறிவிப்பால் அரசு ஆண் ஊழியர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள அனைத்து அரசு ஆண் ஊழியர்களுக்கும், மனைவியின் மகப்பேறு காலத்தில் 15 நாட்கள் விடுப்பு வழங்குவது, 2023ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. தந்தை வழி விடுப்பு என்ற பெயரில், மனைவியின் பிரசவத்திற்கு 15 நாட்களுக்கு முன் அல்லது குழந்தை பிறந்த நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள், இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த தந்தை வழி விடுப்பு, மற்ற விடுப்பு கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. தந்தை வழி விடுப்பு குறிப்பிட்ட காலத்திற்குள் எடுக்காவிட்டால், அது காலாவதியானதாக கருதப்படும். எந்த சூழ்நிலையிலும் தந்தை வழி விடுப்பை நிராகரிக்கக்கூடாது எனவும், அப்போது உத்தரவிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, அரசு ஊழியர்கள் பதில் பெற்றுள்ளனர். பலர் தந்தை வழி விடுப்பையும் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், புதிதாக ஆண் மகப்பேறு விடுப்பு அறிவித்துள்ளது, அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

