நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா? என்டிஏ நடவடிக்கைக்கு அண்ணாமலை விமர்சனம்!

 
annamalai

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் ;

சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் படைகளின் இரு அடுக்கு பாதுகாப்புடன், இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வசதி. ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு அடுக்கு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள். தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரச் சரிபார்ப்பு மற்றும் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் உடல் பரிசோதனை, பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்புடன் கூடிய பல அடுக்கு மேற்பார்வை அமைப்பு.

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளா?கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு மூலம் வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஒவ்வொரு மாணவரும் பாராட்டுவார்கள். ஆனால், நுழைவதற்கு முன் அதிகரிக்கப்பட்ட சோதனைகள், நீண்ட நேர உடல் பரிசோதனை மற்றும் மொத்தத் தேர்வு நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரிப்பது ஆகியவை, ஏற்கனவே மாணவர்களிடம் பெருகிவரும் தேர்வு குறித்த மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும், பல மாதங்களாகத் தயாராகி வந்த ஒரு தேர்வை எதிர்கொள்ளும் இளம் மாணவர் மீது சுமத்தப்படும் கூடுதல் சுமையை அது மறந்துவிட்டது. தேர்வுக்கான இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதிலும், நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன.அவற்றை விரைவில் சரிசெய்வதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளது. தீர்வுகள் தேவைப்படும் சவால்கள் உள்ளன. நீட் மறுத்தேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள், சிக்கலைத் தீர்க்காமல் மாறாக புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது என்பது எனது கவலையாகும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.