மாணவர்களே ரெடியா ? இன்று முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்..!

 
1

கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். தொடர்பு எண்: 044 – 24343106 / 24342911. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.