மகளிர் உரிமைத் தொகை 50% பேர் நீக்கமா? - தவெக அரசு மறுப்பு

 
a

மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட பயனாளிகளில் சுமார் 50 சதவீதம் பேர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் சுமார் 50 சதவீதம் பேர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது. இது தொடர்பான உண்மை நிலை பின்வருமாறு: மகளிர் உரிமைத் தொகை முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் சேர்க்கப்பட்ட தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000/-நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி இத்தொகை வழங்கப்படுகிறது. நவம்பர் 2026 மாதத்திற்கான உரிமைத்தொகை 14.11.2026 அன்று மொத்தம் 1,29,97,568 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 17 இலட்சம் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும். இரண்டாம் கட்டப் பயனாளிகளைப் பெருமளவில் நீக்கும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கென எந்தவொரு சிறப்பு நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பல்வேறு அரசுத் துறைகளின் தரவுத்தளங்களுடன் பயனாளிகளின் விவரங்கள் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் வழக்கமான புதுப்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சரிபார்ப்பு நடைமுறையானது திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், இந்நடைமுறை முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் என எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைத்துப் பயனாளிகளுக்கும் பொதுவாகப் பொருந்தும். அதன்படி, பயனாளிகளில் யாரேனும் இறந்திருந்தாலோ, திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெறத் தகுதியற்றவர்களாக மாறியிருந்தாலோ அல்லது தாங்களாகவே திட்டத்திலிருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தாலோ, அத்தகைய விவரங்களின் அடிப்படையில் பயனாளிகள் பட்டியல் ஒவ்வொரு மாதமும் உரிய முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, இது தொடர்பாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் எவ்விதமான உண்மையும் இல்லை. இத்தகைய தவறான செய்திகள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே, 50 சதவீதம் பேர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெளிவுபடுத்தப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.