"மு.க.ஸ்டாலினை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட வந்துள்ளேன்”- அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

 
தமிழ்நாடு மக்களுக்காக மிகச்சிறந்த பணிகளை ஸ்டாலின் செய்து வருகிறார்: அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாடு மக்களுக்காக மிகச்சிறந்த பணிகளை ஸ்டாலின் செய்து வருகிறார். அவரது இந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது என ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தமிழ்நாடு வருகை தந்து வருகின்றனர் அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக டெல்லியில் இருந்து தான் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் மு க ஸ்டாலின் தலைமையிலான கடந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் தமிழ்நாடு மிகச் சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும் மக்கள் மீண்டும் அவருக்கு வாக்களித்தால் பல்வேறு நல்ல திட்டங்கள் அவரது ஆட்சி காலத்தில் தொடரும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதைவிட மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் அவர் கூறினார். அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி ஆட்சி அமைத்தால் அனைத்து நல்ல திட்டங்களும் தடைப்படும் என்று அவர் தெரிவித்தார். டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்ததும் தான் கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் அவர்கள் தடுத்து விட்டதாகவும் அந்த அனுபவம் தனக்கு உள்ளதாக அவர் கூறினார். நாளை நடைபெற உள்ள பிரச்சாரத்தில் தான் கலந்து கொள்வதாக கூறிய அவர் மக்களிடம் உரையாட உள்ளதாகவும் தனிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.


ஒன்றிய பாஜக அரசு ஜனநாயகத்தை கொலை செய்யும் வகையில் பல்வேறு விஷயங்களை செய்து வருவதாக குறிப்பிட்ட அவர் , இந்தியாவில் ஒரு சில மாநிலங்கள் மட்டுமே பாஜகவின்  சர்வாதிகாரப் போக்கை வலுவாக எதிர்த்து வருவதாகவும் , அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியாக உள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தொகுதி மறு வரையறை மசோதா என்பது ஜனநாயகத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறிய அவர் , அந்த மசோதா தோல்வி அடைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மோடியின் ஒன்றிய பாஜக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.