இனி அனைத்து கோவில்களிலும் பூஜைகள், வழிபாடுகள் போன்றவற்றில் அரளிப்பூவுக்குத் தடை..!

 
1

கேரளா கொச்சி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்னும் இளம் பெண்ணிற்கு இங்கிலாந்தில் வேலையில் சேர வாய்ப்பு கிடைத்தது.அதற்காக அவர் விமான நிலையம் செல்ல தயாராகி இருக்கும் போது அரளிப்பூவை எதேச்சையாக சாப்பிட்டதால் உடல் நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார் 
 

இச்சம்பவம் கேரளாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதன் பின்னர் அரளிச் செடியின் தழைகளை தின்ற பசுவும், கன்றும் மரணமடைந்த சம்பவமும் பதிவானது.

இதையடுத்து அரளி இலை மற்றும் பூ நச்சுத்தன்மை கொண்ட தாவரம் என்பதை மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்தனர்.இதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் அவசர கூட்டம் நந்தன்கோடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

“திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பூஜைகள், வழிபாடுகள் போன்றவற்றில் இனி அரளிப்பூவை பயன்படுத்தக் கூடாது. அதற்கு மாற்றாக மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலை மற்றும் பூ வகைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் கோவில் வளாகத்தில் அரளிச் செடி அல்லாத பூந்தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று திருவிதாங்கூர் தேவஸ்தான அறிக்கை வெளியிட்டது.

கோவில்களில் பூந்தோட்டம் அமைக்கும் பொறுப்பு தேவஸ்தானத்தின் உதவி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என்று அது குறிப்பிட்டது.

திருவிதாங்கூர் தேவஸ்தானம் போல் மற்ற கோவில் தேவஸ்தானங்களும் இனிவரும் நாள்களில் அரளிப்பூவை பயன்படுத்தத் தடை விதிக்கலாம் என்று தகவல் வெளியானது.