"நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை"- ஆ.ராசா

 
ராசா ராசா

எனக்கு இந்தி தெரியாது, புரியாது. ஆனால் நான் ஒரு இந்தியன் என திமுக எம்பி ஆ.ராசா மக்களவையில் காட்டமாக தெரிவித்தார்.

மாநிலங்களவையில் உரையாற்றிய திமுக எம்பி ஆ.ராசா, “எந்த விவகாரம் ஆனாலும் நேரு, இந்திரா, காங்கிரஸ் என பேசுவதே பாஜகவினரின் வாடிக்கையாகிவிட்டது. உங்களால் நேருவின் கொள்கையை பின்பற்ற முடியாது. குறைந்தபட்சம் வாஜ்பாய் கொள்கைகளையாவது பின்பற்றுங்கள். அண்டை நாடுகளுடன் போர் ஏற்பட்டபோது நேரு எதையும் மறைக்கவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம். பஹல்காம் தாக்குதல், நிர்வாக திறமையின்மையையே காட்டுகிறது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்காக பிரதமர் முதல் பாஜக எம்.பி., வரை ஒருவர் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாலே, அது வெற்றி என கூறக்கூடாது. உளவுப் பிரிவும், RAW அமைப்பும் பல முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்த பிறகும் அரசு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை.

நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை. அமெரிக்க துணை அதிபர் இந்தியப் பிரதமரை அழைத்து, பாகிஸ்தான் தாக்கப் போவதாகக் கூறுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறியது வெட்கக்கேடு. இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது? பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு சிறுபிள்ளைத் தனமாக இருந்தது. திமுக என்பது தேச ஒற்றுமைக்கான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்களை தேச விரோதிபோல சித்தரிக்க முயற்சி நடக்கிறது. எனக்கு இந்தி தெரியாது, புரியாது. ஆனால் நான் ஒரு இந்தியன்” என்றார்.