மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 நபர்களுக்கு பணிநியமன ஆணை!!
மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.9.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மீனவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மீனவ மக்களிடம் கொண்டு சேர்த்தல், மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல், கடல் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்துதல், மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்குதல், மீன்பிடி கலன்களை பதிவு செய்தல் மற்றும் உரிமம் வழங்குதல், கடல் மீன் வளர்ப்பு / கூண்டு வளர்ப்பை ஊக்குவித்தல், நவீன மீன்பிடி முறைகளில் பயிற்சி அளித்தல் போன்ற பல்வேறு பணிகளில் மீன்துறை ஆய்வாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இத்தகைய முக்கியவத்துவம் வாய்ந்த மீன்துறை ஆய்வாளர் பணிகள் தொய்வின்றி நடைபெற மீன்துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு 65 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.