நிலஅளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு பணிநியமன ஆணை

 
tn

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 698 நிலஅளவர்கள் மற்றும் 224 வரைவாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (15.5.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிலஅளவர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 698 நபர்களுக்கும், வரைவாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 224 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

stalin

வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் காலியாக உள்ள நிலஅளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கு உண்டான அடிப்படை கல்வித் தகுதியினை மாற்றியமைத்து புதிய தொழில் நுட்ப கல்வித் தகுதியின் அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 698 நிலஅளவர்கள் மற்றும் 224 வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார். இந்தப் பணி நியமனம் மூலமாக பல்வேறு ஆண்டுகளாக பட்டா வழங்கப்படுவதில் இருந்து வந்த சிரமங்களை நீக்குவதற்கும், நிலம் மற்றும் நில அளவை சார்ந்த அனைத்து சேவைகளையும் உடனடியாக வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும்.

mk stalin

முன்னதாக, தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரைபடக் கண்காட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார். இக்கண்காட்சியில் பண்டைய சென்னை மாகாண வரைபடங்கள், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு பிறகான சென்னை மாநில வரைபடங்கள், தற்போதைய தமிழ்நாடு மாநில வரைபடங்கள், மாவட்டங்களின் வரைபடங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.