3271 காவலர்களுக்கு பணி நியமன ஆணை!!

 
tn

செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ரூ.36.39 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்து இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   இன்று (19.5.2023) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 36 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட காவல் அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 3271 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு செய்யப்பட்டவர்களுக்கு தேர்வு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

tn

காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டில் 12 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவிலும், இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டையில் 12 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவிலும், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 12 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம், 36 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட காவல் அலுவலகக்கட்டடங்களை  தமிழ்நாடு முதல்வர்  திறந்து வைத்தார்.

stalin

முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இம்மாவட்ட காவல் அலுவலகக் கட்டடங்கள் தரை மற்றும் மூன்று தளங்களுடன் சுமார் 4245 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறை, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறைகள், கட்டுப்பாட்டு அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, உணவருந்தும் கூடம், அலுவலக அறைகள், ரேடியோ ஸ்டேஷன், கூட்டரங்கம், கைரேகை பிரிவு. சைபர் லேப், சிசிடிவி கேமராக்கள், மின்தூக்கி, மின்னாக்கி, தீயணைப்பு கருவிகள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 2617 ஆண்கள் மற்றும் 654 பெண்கள், என மொத்தம் 3271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் 10 நபர்களுக்கு இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் 1.6.2023 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.