உடனே விண்ணப்பீங்க..! மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்கும் ஏர்டெல் ஸ்காலர்ஷிப்..!

பாரதி ஏர்டெல் அறக்கட்டளை தனது 25ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக பாரதி ஏர்டெல் மாணவர் ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு சமூகப் பொருளாதார பின்னணியில் இருந்து வரும் தகுதியான மாணவர்களுக்கு, பயன் அளிப்பதே இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளை (5 ஆண்டுகள் வரை) கொண்டிருக்கும், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) உள்ள டாப் 50 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐஐடி மெட்ராஸ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அண்ணா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சண்முகா ஆர்ட்ஸ் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் ரிசர்ச் அகாடமி, கலசலிங்கம் அகாடமி ஆஃப் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன், ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 2024இல் சேர்க்கைக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் 250 மாணவர்களுடன் தொடங்கும் இந்த திட்டம் படிப்படியாக அடுத்தடுத்து ஆண்டுகளில் விரிவாக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி செலவு செய்யப்படுவதுடன், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் ஸ்காலர்ஷிப்பால் பயனடைவார்கள்.
இந்த உதவித்தொகையில் முழுமையாக நிதியுதவி அளிக்கப்படும். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த தகுதியுள்ள மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8.5 லட்சத்துக்கும் மிகாமல் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
பாரதி ஏர்டெல் ஸ்காலர்ஷிப்கள் 50 முன்னணி என்ஐஆர்எஃப் பொறியியல் கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், டெலிகாம், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (AI, IoT, AR/VR, மெஷின் லேர்னிங், ரோபோடிக்ஸ்) ஆகிய துறைகளில் UG மற்றும் ஒருங்கிணைந்த துறைகளில் சேர்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையைப் பெறுபவர்கள் ‘பாரதி ஸ்காலர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். படிப்புக் காலம் முழுவதும் அவர்கள் தங்கள் கல்லூரிக் கட்டணத்தில் 100% தொகையைப் பெறுவார்கள் மற்றும் மடிக்கணினியும் கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.