“சனிக்கிழமை தோறும் பனையூர் கேட் முன் நிற்கும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள்”- அப்பாவு

 
சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு போட்டி!

சனிக்கிழமை தோறும் பனையூர் கேட் முன் நிற்கும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.-க்களுக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்பாவு

இதுகுறித்து அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “ஒருவர் அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு தன்னையே அர்ப்பணித்துக் கொள்வது இயல்பு.  சில நேரம் சில கட்சிகளில் இருந்து கொள்கை முரண்பாடு மற்றும் சில கருத்து வேறுபாடு காரணமாக  சிலர் ஒரு கட்சியை விட்டு விலகி இன்னொரு கட்சியில் இணைவது இயல்பான ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக சனிக்கிழமை தோறும்   முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் MP-MLA க்கள்  மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லாம் பனையூர் பங்களா கேட் (Gate) முன் நிற்பதை பார்த்தால் ஜவுளி கடைகளில் ஆடித்தள்ளுபடிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களைப்  போன்று தெரிகிறது. 

பனையூர் பங்களா கேட் திறந்ததும்  ,புதிய திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து கொண்டு  ஓடும்  ரசிகர்களைப் போல் சென்றாலும் அங்கு கட்சித்  தலைவரை பார்க்க முடிவதில்லை. யாரோ ஒரு சிலர் கொடுக்கும் கட்சித்துண்டை தோளில் சுமந்து கொண்டு திரும்பி வருகின்றனர். தொண்டனின் நன்மைகளிலும் தீமைகளிலும் இயக்க தலைமை பங்கேற்கும் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு தொண்டனும் கட்சிக்காக இரவு பகலாக உழைப்பான். ஆனால்  கரூரில் தன்னை பார்க்க வந்த தொண்டர்கள், ரசிகர்கள் 41 பேர்கள் இறந்ததை திரும்பி கூட பார்க்காத ,  ஒரு தலைமையை நம்பி இவர்கள் செல்வதை பார்த்தால்  "இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிகாட்சி தான் நினைவுக்கு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.