அமித்ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு அரசியலில் நடித்து வருகிறார் விஜய் - அப்பாவு
நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பது போல் அரசியலிலும் நடிப்பதற்காக அமித்ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு வந்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி விளையாட்டு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர் கலராக இருக்க வேண்டும் என்று அல்லாமல் அரசு பணியாளர்களும் பொதுமக்களும் திறமையுள்ள வீரர்களாக உருவாக்க நிலையில் மாநில அளவில் மாவட்ட அளவில் மண்டல அளவில் 27 வகையான போட்டிகளை அறிமுகப்படுத்தி வெற்றி பெறும் அணிகளுக்கு முதலமைச்சர் கோப்பையை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கருணை உள்ளம் கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளார். பாதிப்பு சம்பவம் கேள்விப்பட்டவுடன் நள்ளிரவு ஒரு மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூர சம்பவத்திற்கு காரணமான விஜய் இரவோடு இரவாக பனையூருக்கு சென்று பதுங்கி கொண்டார். தலைவனாக இருந்தால் நெஞ்சில் உறுதி வேண்டும். ஈவு இரக்கம் வேண்டும். அமித்ஷாவின் ஆலோசனையின்படியே இந்த கட்சியை விஜய் ஆரம்பித்தார். தற்போது கரூரில் கூட்டம் நடந்தபோது அதில் பங்கேற்க வந்த விஜய் அந்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒன்றரை மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வேண்டும் என்றே தாமதமாக பிரச்சார இடத்திற்கு வந்தது தான் இது போன்ற விபத்துக்கு காரணம். நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பது போல் அரசியலிலும் நடிப்பதற்காக அமித்ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு வந்துள்ளார். அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

