“இந்த அரசுக்கு இன்னமும் முட்டுக்கொடுக்கப் போகிறீர்களா?”- தவெக கூட்டணி கட்சியினருக்கு அப்பாபு கேள்வி
தமிழ்நாட்டில் நடப்பது த. வெ. க ஆட்சியா? அல்லது RSS ஆட்சியா என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் இருந்து திமுக தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் விலகி 55 நாட்களில் தமிழக மக்கள் இழந்த உரிமைகளும், பெருமைகளும் ஏராளம்.. ஆளுநரின் அதிரடி ஆய்வு, கன்னியாகுமரி மாவட்ட கடலோர மீனவ கிராமத்தில் அணு கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு, தலைவர் கலைஞரால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீடு நீதிமன்றம் மூலம் பறிப்பு, பக்ரீத் பண்டிகையின் போது-பொது இடத்தில் தொழுகை நடத்தவும் பலியிடவும் நீதிமன்ற தடை, சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களின் உரிமையை பறிக்கும் வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குபடுத்தும் சட்டம் (FCRA), கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமிய தொழுகை கூடங்கள் கட்ட ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்கும் சட்டத்திற்கு நீதிமன்றத் தடை ( உதாரணம்-- கோவை CSI தேவாலயம் கட்ட தடை), திருப்பரங்குன்றம் மலை மீது மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த தமிழக அரசு அனுமதி என்று தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்த த.வெ.க அரசை தாங்கிப் பிடிக்கும் காங்கிரஸ் இதனை ஏற்கிறதா?
தம்பி திருமாவளவன் ஆதரிக்கிறாரா? இடதுசாரி தோழர்கள் அங்கிகரிக்கிறாரகாளா? IUML தலைவர்கள் சம்மதிக்கிறார்களா? தலைவர் கலைஞராலும் தளபதி மு.க.ஸ்டாலினாலும் பல பதவிகளை பெற்ற வைகோ இதனைப் பார்த்து மன மகிழ்ச்சி கொள்கிறாரா?... தமிழ்நாட்டில் நடப்பது த. வெ. க ஆட்சியா? அல்லது RSS ஆட்சியா? தமிழ்நாட்டின் உரிமைகளையும் பெருமைகளையும் 55 நாட்களில் பறி கொடுத்து நிற்கும் தமிழக மக்கள் தெளிவு பெறுவார்களா? த.வெ.க வின் தோழமை கட்சிகளே தமிழக மக்களின் நலன் குறித்து இனியாவது சிந்திப்பீர்களா? அல்லது தொடர்ந்து இந்த அரசுக்கு இன்னமும் முட்டுக்கொடுக்கப் போகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

