முதலமைச்சருக்கு ஆஞ்சியோகிராம் சோதனை - அப்போலோ மருத்துவமனை அறிக்கை..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி சென்றபோது ஏற்பட்ட திடீரென தலைச்சுற்றல் ஏற்படவே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்குப் பின் மருத்துவமனையில் இருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்தும், அதுதொடர்பான பணிகள் குறுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இருப்பினும் 4வது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் தொடர் சிக்கிசையில் இருந்து வருகிறார். அவருக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது, இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


