2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான ஏலத்தில் நிச்சயம் பங்கேற்போம்- அனுராக் சிங் தாக்கூர்

 
anurag

2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான ஏலத்தில் நிச்சயம் பங்கேற்போம் என ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Image

 கடந்த 19-ம் தேதி சென்னையில் தொடங்கிய கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெற்றது. இப்போட்டியின் நிறைவு விழா சென்னையில் இன்று (31.01.2024) நடைபெற்றது.  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையை பரிசாக அளி்த்தார். நிகழ்ச்சியில் பேசிய அனுராக் சிங் தாக்கூர்,  “கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இளம் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைக்க  மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன. தமிழ்நாட்டின் விருந்தோம்பல் தான் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தி முடிக்க மிகப்பெரிய ஆதரவாக இருந்தது.

Image

பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவிற்காக 11 நாட்கள் விரதம் மேற்கொண்டிருந்த நிலையிலும், இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத்  தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி இளைஞர் மேம்பாட்டில் ஈடுபாடுடன் இருப்பதற்கு சிறந்த உதாரணம் 11 நாட்கள் கடுமையான விரதத்தில் இருந்த போதும் தமிழ்நாடு வந்து கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்ததே, உலகில் 6ல் ஒரு பங்கு மக்கள் தொகை இந்தியாவில் உள்ளோம். விரைவில் பொருளாதாரத்தில் 3-வது இடைத்தை அடையவுள்ளோம். தலை சிறந்த விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள இந்தியா, விளையாட்டிற்கான சிறந்த சந்தையை கொண்டுள்ளதால் இந்திய இளைஞர்களிடம் கனவாக உள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா நிச்சயம் பங்கேற்கும். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7 ஆண்டுகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது” என தெரிவித்தார்.