விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு சிறப்பாக நடத்துகிறது- அமைச்சர் அனுராக் தாக்கூர்

 
அனுராக் தாக்கூர்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்கவிழா பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல் முருகன், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “மோடி தலைமையிலான ஆட்சியில் விளையாட்டுத் துறையில் இந்தியா பல சாதனைகளை படைத்துவருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ இந்தியா விளையாட்டுதான் அடித்தளமிட்டடது. தூர்தர்ஷன் பிராந்திய ஒளிபரப்புகளில் தூர்தர்ஷன் தமிழ் தான் முதல் ஹெச்டி சேனல். 2030 ஆம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிரதமர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

விளையாட்டு துறைகளில் இருந்த ஊழல்களை இல்லாமல் மாற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் செஸ் போட்டி என்றால் விஸ்வநாதன் ஆனந்த் என்று இருந்த நிலையை பல வெற்றிகளுக்கு பின் பிரக்யானந்தா மாற்றி உள்ளார். எப்போதெல்லாம் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொறுப்பு தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டதோ, அப்போதெல்லாம் அதை சிறப்பாக தமிழ்நாடு செய்திருக்கிறது. கேலோ இந்தியா போட்டிகள் வெறும் பதக்கங்களை வெல்வதற்கான இடம் மட்டுமல்ல, ஒழுக்கம் மற்றும் ஈடுபாட்டுடன் செயல்படுபவையும் அடங்கும். கேலோ இந்தியா போட்டிகளால் ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது. விளையாட்டில் இந்தியாவை தலை சிறந்த நாடாக்க உழைத்துவருகிறோம்” என்றார்.