ஆண்டிபட்டியில் பானிபூரி கடைகளில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயன நிறமி கலப்பு

 
பானிபூரி

ஆண்டிபட்டியில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புற்றுநோயை உண்டாக்கும் 'ரோடமைன் பி' ரசாயன நிறமி கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை பினாயில் ஊற்றி அழித்தனர். 

பானி பூரியில் கலக்கப்படும் ரோடமைன் பி நிறமி கலந்த மசாலா ரசநீரால் புற்றுநோய் ஏற்படும் என புகார் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாணிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆண்டிபட்டி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜவகர் ஜோதிநாதன், ஆண்டிபட்டி காவல்நிலைய  சார்பு ஆய்வாளர் பிரபா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து பானிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பானிபூரிக்கு வழங்கப்படும் மசாலா ரசநீரில் கவர்ச்சிகரமான நிறத்திற்காக  உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ள ரோடமைன் பி சாயம் கலக்கப்பட்டுள்ளதா என்றும், பாதுகாப்பான முறையில் பானி பூரி விற்கப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்து சென்னை பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்க எடுத்து சென்றனர் 

மேலும் சாயம் கலந்து விற்கப்பட்ட சிக்கன், காலிபிளவர் உள்ளிட்ட பொறித்த உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து பினாயில் உள்ளிட்ட கிருமி நாசினிகளை தெளித்து அவற்றை பயன்படுத்த முடியாதவாறு அழித்தனர். மேலும் இதனை விற்பனை செய்த  ஒவ்வொரு கடைக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.