கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை : டெல்டா மாவட்டங்களில் 535 பேர் கைது..

 
கள்ளச்சாராயம்

டெல்டா மாவட்டங்களில் நடத்தப்பட்ட சாராய தடுப்பு வேட்டையில்  இதுவரை 535 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து  22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில்  மாநிலம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த வேண்டுமெனவும், சாராயம் விற்பனையில் ஈடுபடுபவகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.   அதன்படி மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் இறங்கியுள்ள போலீஸார்,  அந்தந்த மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்து , கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது

அந்தவகையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 16ம் தேதி ( நேற்று முன்தினம்) வரை 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 152 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 143 வழக்குகளும்  145 பேர் கைதும்,  நாகையில் 94 வழக்குகளும் 94 பேர் கைதும்,   மயிலாடுதுறையில்  77 வழக்குகளும்,  77 பேர் கைதும் செய்யப்பட்டனர். மொத்தமாக நேற்று வரை டெல்டா மாவட்டங்களில் மட்டும் 536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  535 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.